Friday 27 January 2012

அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின்சாரம்

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேவைக்கு ஏற்ற மின் தயாரிப்பு திட்டங்களில் நாம் பின்தங்கியே இருக்கிறோம். தேவையை சமாளிக்க அணுமின் நிலையம் அமைப்பதில் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அணுக்கழிவுகள் ஆபத்தானவை என்பதும் அடுத்த சந்ததிகளுக்கு நாம் அச்சுறுத்தலை விட்டுச் செல்கிறோம் என்பதும் அவர்கள் கருத்து. எனவே மின் தேவைக்கு மாற்று மின் தயாரிப்பு முறைகளையும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளையும் கடை பிடித்தாலே மின்சாரப் பற்றாக் குறை நிலவாது. சிக்கனம் என்பதே ஊதாரித்தனத்தை ஒழிப்பது தான்.

சூரிய மின் கலன்கள் அமைத்து மின்சாரம் தயாரித்து மாநிலம் முழுமைக்கும் விநியோகிப்பது மிகுந்த செலவு பிடிக்கும் திட்டம். பொது மக்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிக்க வேண்டி இருக்கும். எனவே அரசாங்கம் பெரிய அளவில் சூரிய மின் கலன்கள் அமைக்காமல் சிறிய அளவில் ஏராளமான சூரிய மின் கலன்களை அமைக்கலாம். இதையும் கூட அரசின் பொது நிதியில் இருந்து எடுக்காமல், மாநிலம் முழுவதும் இருக்கும் அரசு அலுவலங்களுக்கு சூரிய மின் கலன்கள் அமைக்க அனுமதி வழங்கலாம். அரசு அலுவலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியிலோ அல்லது வருவாய் ஈட்டும் அலுவலங்கள் அல்லது துறைகள் வருவாயில் இருந்து நிதியை ஒதுக்கி அந்தந்த அலுவலகங்களில் அவர்களின் தேவைக்கு மட்டும் சூரிய மின் கலன்களை அமைத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் மின்சார வாரியத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை 80%க்கும் மேல் குறைத்துக் கொள்ள முடியும். சொந்த மின்கலன்கள் என்பதால் மாதமொருமுறை மின்கட்டணம் செலுத்தும் சுமையில் இருந்தும் தப்பிக்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அந்தந்த அலுவலகங்களுக்கு பெரும் அளவில் நிதி சேமிக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் அனைத்தும் வருவாய் ஈட்டும் நிலையில் தான் இயங்குகின்றன. அவர்கள் சொந்தமாக சூரிய கலன்கள் அமைப்பதில் எந்த சிரமும் ஏற்படாதும் மாறாக ஒவ்வொரு மாதமும் பல லட்சங்கள் மின் கட்டணம் சேமிக்கப் படும். பிற துறை அலுவலகங்களிலும் இதை செயல்படுத்தலாம்.

மேலும் புதிதாகக் கட்டப் படும் அனைத்து அரசு அலுவலகக் கட்டிடங்களுக்கும் சூரிய மின்சக்திக்கும் சேர்த்தே நிதியை ஒதுக்க வேண்டும். ஆரம்பம் முதலே இந்த அலுவலகங்கள் மின் கட்டணத்தையும் மின்சாரத்தையும் சேமிக்க முடியும். எனவே மாநில மின்சார வாரியத்தின் பெரும் சுமை குறைக்கப் படும். பொது மக்களின் தேவைக்கு தடையற்ற மின்சாரமும் வழங்க முடியும்.

சில சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  • மேம்பாலங்கள், அரசு அலுவலகங்கள், புதிய திட்டங்கள் ஆகியவை தொடங்கப் படும் போது செய்யப் படும் விளக்கு அலங்காரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும். 
  • அனைத்து மத ஆலயங்களிலும் தினமும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்வதற்கு தடை விதித்து முக்கிய விழாக் காலங்களில் மட்டும் அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு மானிய விலையில் சூரிய மின் கலன்கள் அளிக்க வேண்டும்.
  • கிராமப்ப் புறத் திருவிழாக்களின் போது முறைகேடாக பயன்படுத்தப் படும் மின்சாரத்தைக் கண்காணித்து தடுக்க வேண்டும்.
  • பெரும் தொழிற்சாலைகள் முறைகேடாக பயன்படுத்தும் மின்சாரத்தையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • புதிய கட்டிடங்கள் கட்டும் போது, போதிய வெளிச்சம், காற்றோட்ட வசதி இல்லாத வரைபடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. இதனால் பெரும் அளவின் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாம்.
  • காலை 7 மணி 8 மணி வரையிலும் கூட பல இடங்களில் தெருவிளக்குகள் அணைக்கப் படுவதில்லை. அதை முறைபடுத்த வேண்டும்.
  • தெருவிளக்குக் கம்பங்களில் சிம்கார்டுகள் பொறுத்தி தொலைபேசி வழியாக கட்டுபடுத்த வேண்டும். இதனால் மனிதத் தவறுகள் தவிர்க்கப் படும். மின்சாரமும் சேமிக்கப் படும்.
அன்புடன்
சஞ்சய்காந்தி

3 comments:

தெருவிளக்குக் கம்பங்களில் சிம்கார்டுகள் பொறுத்தி தொலைபேசி வழியாக கட்டுபடுத்த வேண்டும். இதனால் மனிதத் தவறுகள் தவிர்க்கப் படும். மின்சாரமும் சேமிக்கப் படும்.// சென்சர் அல்லது டைமர் வெச்சாலே போதும்னு நினைக்கறேன்.

சஞ்செய் கிராமப்புரங்கள்ல வீடுகளில் 500 அல்லது 1000 வாட்ஸ் அளவுல சோலார் இன்வெர்ட்டர் தரலாம். இதுல பிரச்சனையே பேட்டரிகள்தான். அதுல நல்ல முன்னேற்றமும் ஆராய்ச்சியும் வந்தா நிச்சயமா பலன் கிடைக்கும்.

காற்றாலை பற்றி தனியா எழுதுவீங்களா? கிட்டத்தட்ட 7500 கிலோமீட்டர் அளவுக்கு காற்றாலைகள்மூலம் மின் உற்பத்தி எடுக்க வாய்ப்புள்ள இடங்கள் தமிழ் நாட்ல இருக்குன்னு அணு உலை எதிர்ப்பாளர்கள் கணக்கு சொல்றாங்க.

மின் உபகரணங்கள்ல 5ஸ்டார் ரேட்டிங் பத்தியும் சேர்த்துடுங்க.

சஞ்சய், ட்ரான்ஸ்மிஷன் லாஸைக் குறைப்பது பற்றியும் விரிவாக எழுதவும்

அட உருப்படியான ப்ளாக் ஒண்ணு! நன்றி!

Post a Comment