Thursday 19 January 2012

போக்குவரத்துப் பணியில் மாணவர்கள்

பெரு நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் கூட Peak Hoursல் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களால் பொது மக்கள் படும் துன்பத்திற்கு அளவே கிடையாது. இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று, போதுமான அளவு போக்குவரத்துக் காவலர்கள் இல்லை. இரண்டு, போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளின் விதிமீறல்கள். இவற்றை சரி செய்தால் போக்குவரத்து நெரிசல்களை பெருமளவில் கட்டுப் படுத்த முடியும்.

தற்போதுள்ள நிலையில் காவல்துறையில் போக்குவரத்துப் பணிக்கு காவலர்கள் பற்றாக்குறை இருப்பதை உணர முடிகிறது. நெரிசல் மிகுந்த பல சிக்னல்களில் காவலர்களே இருப்பதில்லை. வாகன சோதனைகளில் ஈடுபடும் இடங்களில் 3 முதல் 5 காவலர்கள் வரை பணியில் ஈடுபடுகிறார்கள். இதனாலும் சிக்னல்களில் காவலர்கள் பற்றாக் குறை நிலவுகிறது. இதை சரி செய்ய வேண்டுமெனில் போதுமான அளவு காவலர்களை பணியில் சேர்க்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதில் நடக்கற காரியம் இல்லை. நிதி நிலவரம் உள்ளிட்ட காரணங்களை கொண்டுவருவார்கள்.

பதிலாக, கல்லூரி மாணவர்களை போக்குவரத்துப் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் இதை சமாளிக்கலாம். அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பலரும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். கல்வி செலவுகளுக்கு கஷ்டப் படும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து தினம் ஊதியம் கொடுத்து பணியில் அமர்த்தலாம். வகுப்புகள் முடிந்த பின் இரவு படிக்க ஆரம்பிக்கும் வரை ஹாஸ்டலில் பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம், அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும். பணியாற்றிய அனுபவமும் கிடைக்கும்.

தேர்வில் வெற்றி பெருவது என்பது பாடங்களை மனப்பாடம் செய்வது மட்டுமே இல்லை. இது போன்ற சமூகக் கடமைகளில் ஈடுபடுத்திக் கொள்வதையும் மனதில் கொண்டு அதை மதிப்பெண்களில் சேர்க்கலாம். மேல்படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முன்னுரிமையும் கொடுக்கலாம். இதன் மூலம் ஆள் பற்றாக்குறை உள்ள பல்வேறு அரசுப் பணிகளுக்கும் தற்காலிகமாக பணிபுரிய மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அரசுக்கும் அதிக நிதிச் சுமை ஏற்படாது.

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், மாலை நேரக் கல்லூரியில் படிப்பவர்களை காலை வேளைகளிலும் பகல் நேரக் கல்லூரியில் படிப்பவர்களை மாலை நேரங்களிலும் போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். வாகன சோதனைகளிலும் மாணவர்களை பயன்படுத்துவதன் மூலம் வாகன ஓட்டிகளும் சரியாக போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பார்கள்.

- சஞ்சய்காந்தி

1 comments:

சஞ்சய், இந்த ப்ளாக் ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

Post a Comment