Friday 27 January 2012

அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின்சாரம்

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேவைக்கு ஏற்ற மின் தயாரிப்பு திட்டங்களில் நாம் பின்தங்கியே இருக்கிறோம். தேவையை சமாளிக்க அணுமின் நிலையம் அமைப்பதில் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அணுக்கழிவுகள் ஆபத்தானவை என்பதும் அடுத்த சந்ததிகளுக்கு நாம் அச்சுறுத்தலை விட்டுச் செல்கிறோம் என்பதும் அவர்கள் கருத்து. எனவே மின் தேவைக்கு மாற்று மின் தயாரிப்பு முறைகளையும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளையும் கடை பிடித்தாலே மின்சாரப் பற்றாக் குறை நிலவாது. சிக்கனம் என்பதே ஊதாரித்தனத்தை ஒழிப்பது தான்.

சூரிய மின் கலன்கள் அமைத்து மின்சாரம் தயாரித்து மாநிலம் முழுமைக்கும் விநியோகிப்பது மிகுந்த செலவு பிடிக்கும் திட்டம். பொது மக்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிக்க வேண்டி இருக்கும். எனவே அரசாங்கம் பெரிய அளவில் சூரிய மின் கலன்கள் அமைக்காமல் சிறிய அளவில் ஏராளமான சூரிய மின் கலன்களை அமைக்கலாம். இதையும் கூட அரசின் பொது நிதியில் இருந்து எடுக்காமல், மாநிலம் முழுவதும் இருக்கும் அரசு அலுவலங்களுக்கு சூரிய மின் கலன்கள் அமைக்க அனுமதி வழங்கலாம். அரசு அலுவலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியிலோ அல்லது வருவாய் ஈட்டும் அலுவலங்கள் அல்லது துறைகள் வருவாயில் இருந்து நிதியை ஒதுக்கி அந்தந்த அலுவலகங்களில் அவர்களின் தேவைக்கு மட்டும் சூரிய மின் கலன்களை அமைத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் மின்சார வாரியத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை 80%க்கும் மேல் குறைத்துக் கொள்ள முடியும். சொந்த மின்கலன்கள் என்பதால் மாதமொருமுறை மின்கட்டணம் செலுத்தும் சுமையில் இருந்தும் தப்பிக்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அந்தந்த அலுவலகங்களுக்கு பெரும் அளவில் நிதி சேமிக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் அனைத்தும் வருவாய் ஈட்டும் நிலையில் தான் இயங்குகின்றன. அவர்கள் சொந்தமாக சூரிய கலன்கள் அமைப்பதில் எந்த சிரமும் ஏற்படாதும் மாறாக ஒவ்வொரு மாதமும் பல லட்சங்கள் மின் கட்டணம் சேமிக்கப் படும். பிற துறை அலுவலகங்களிலும் இதை செயல்படுத்தலாம்.

மேலும் புதிதாகக் கட்டப் படும் அனைத்து அரசு அலுவலகக் கட்டிடங்களுக்கும் சூரிய மின்சக்திக்கும் சேர்த்தே நிதியை ஒதுக்க வேண்டும். ஆரம்பம் முதலே இந்த அலுவலகங்கள் மின் கட்டணத்தையும் மின்சாரத்தையும் சேமிக்க முடியும். எனவே மாநில மின்சார வாரியத்தின் பெரும் சுமை குறைக்கப் படும். பொது மக்களின் தேவைக்கு தடையற்ற மின்சாரமும் வழங்க முடியும்.

சில சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  • மேம்பாலங்கள், அரசு அலுவலகங்கள், புதிய திட்டங்கள் ஆகியவை தொடங்கப் படும் போது செய்யப் படும் விளக்கு அலங்காரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும். 
  • அனைத்து மத ஆலயங்களிலும் தினமும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்வதற்கு தடை விதித்து முக்கிய விழாக் காலங்களில் மட்டும் அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு மானிய விலையில் சூரிய மின் கலன்கள் அளிக்க வேண்டும்.
  • கிராமப்ப் புறத் திருவிழாக்களின் போது முறைகேடாக பயன்படுத்தப் படும் மின்சாரத்தைக் கண்காணித்து தடுக்க வேண்டும்.
  • பெரும் தொழிற்சாலைகள் முறைகேடாக பயன்படுத்தும் மின்சாரத்தையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • புதிய கட்டிடங்கள் கட்டும் போது, போதிய வெளிச்சம், காற்றோட்ட வசதி இல்லாத வரைபடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. இதனால் பெரும் அளவின் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாம்.
  • காலை 7 மணி 8 மணி வரையிலும் கூட பல இடங்களில் தெருவிளக்குகள் அணைக்கப் படுவதில்லை. அதை முறைபடுத்த வேண்டும்.
  • தெருவிளக்குக் கம்பங்களில் சிம்கார்டுகள் பொறுத்தி தொலைபேசி வழியாக கட்டுபடுத்த வேண்டும். இதனால் மனிதத் தவறுகள் தவிர்க்கப் படும். மின்சாரமும் சேமிக்கப் படும்.
அன்புடன்
சஞ்சய்காந்தி

Thursday 19 January 2012

போக்குவரத்துப் பணியில் மாணவர்கள்

பெரு நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் கூட Peak Hoursல் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களால் பொது மக்கள் படும் துன்பத்திற்கு அளவே கிடையாது. இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று, போதுமான அளவு போக்குவரத்துக் காவலர்கள் இல்லை. இரண்டு, போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளின் விதிமீறல்கள். இவற்றை சரி செய்தால் போக்குவரத்து நெரிசல்களை பெருமளவில் கட்டுப் படுத்த முடியும்.

தற்போதுள்ள நிலையில் காவல்துறையில் போக்குவரத்துப் பணிக்கு காவலர்கள் பற்றாக்குறை இருப்பதை உணர முடிகிறது. நெரிசல் மிகுந்த பல சிக்னல்களில் காவலர்களே இருப்பதில்லை. வாகன சோதனைகளில் ஈடுபடும் இடங்களில் 3 முதல் 5 காவலர்கள் வரை பணியில் ஈடுபடுகிறார்கள். இதனாலும் சிக்னல்களில் காவலர்கள் பற்றாக் குறை நிலவுகிறது. இதை சரி செய்ய வேண்டுமெனில் போதுமான அளவு காவலர்களை பணியில் சேர்க்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதில் நடக்கற காரியம் இல்லை. நிதி நிலவரம் உள்ளிட்ட காரணங்களை கொண்டுவருவார்கள்.

பதிலாக, கல்லூரி மாணவர்களை போக்குவரத்துப் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் இதை சமாளிக்கலாம். அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பலரும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். கல்வி செலவுகளுக்கு கஷ்டப் படும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து தினம் ஊதியம் கொடுத்து பணியில் அமர்த்தலாம். வகுப்புகள் முடிந்த பின் இரவு படிக்க ஆரம்பிக்கும் வரை ஹாஸ்டலில் பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம், அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும். பணியாற்றிய அனுபவமும் கிடைக்கும்.

தேர்வில் வெற்றி பெருவது என்பது பாடங்களை மனப்பாடம் செய்வது மட்டுமே இல்லை. இது போன்ற சமூகக் கடமைகளில் ஈடுபடுத்திக் கொள்வதையும் மனதில் கொண்டு அதை மதிப்பெண்களில் சேர்க்கலாம். மேல்படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முன்னுரிமையும் கொடுக்கலாம். இதன் மூலம் ஆள் பற்றாக்குறை உள்ள பல்வேறு அரசுப் பணிகளுக்கும் தற்காலிகமாக பணிபுரிய மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அரசுக்கும் அதிக நிதிச் சுமை ஏற்படாது.

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், மாலை நேரக் கல்லூரியில் படிப்பவர்களை காலை வேளைகளிலும் பகல் நேரக் கல்லூரியில் படிப்பவர்களை மாலை நேரங்களிலும் போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். வாகன சோதனைகளிலும் மாணவர்களை பயன்படுத்துவதன் மூலம் வாகன ஓட்டிகளும் சரியாக போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பார்கள்.

- சஞ்சய்காந்தி

வணக்கம்..


அனைவருக்கும் வணக்கம்..

ந்த தேசமும் நம் மாநிலமும் எப்படி இருக்க வேண்டும் என மற்றவர்களுக்கு இருக்கும் கனவும் ஆசையும் எனக்கும் உண்டு. அரசியல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால் பல்வேறு தகவல்களைத் தெரிந்துக் கொள்வதில் மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.

நம் கனவுத் தமிழ்நாட்டை கட்டி எழுப்புவோம்.. குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல் தீர்வுகளையும் சொல்வோம். நம் கிராமப் புற வளங்கள், தேவைகள், பொருளாதாரம் பற்றியும் நகர்புற பிரச்சனைகள், தேவைகள், தீர்வுகள், மேம்பாட்டுப் பணிகள் பற்றியும் விவாதிக்கலாம். நம் கனவுத் தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப விரும்பும் யாரும் இதில் பங்கு பெறலாம். கட்டுரைகள் எழுதலாம்.

விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஊர்களைப் பற்றிய சிறப்புகளையும் எழுதலாம். மற்ற பகுதியினர் தெரிந்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.

வெகுஜன பத்திரிக்கைகள் என சொல்லிக் கொள்ளும்
வணிகப் பத்திரிக்கைகள் தொடத் தயங்கும் செய்திகளை நாம்
எழுதுவோம். நம் பகுதிகளில் அதிகம் விளையும் விவசாயப்
பொருட்களையும் அவற்றிலிருந்து பெறப் படும் உபப் பொருட்களையும் அவற்றிற்கான சந்தைகளையும் கண்டறிந்து நம் மக்களுக்கு சொல்வோம்.

விவசாயத்திற்கும் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இருக்கும் சலுகைகள், வங்கிக் கடனுதவிகள், அரசாங்கத் திட்டங்களைக் கூடத் தெரிந்துக் கொள்ளாத லட்சக் கணக்கான மக்கள் இங்கே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தகவல்களை தந்து உதவலாம். தெரியாததை தெரிந்துக் கொள்வோம். தெரிந்ததை தெரியவைப்போம். தனிமனித தாக்குதல், அரசியல் காழ்புணர்வுகளை ஒதுக்கிவிட்டு நம் மக்களுக்குப் பயன்பெறும் அரிய கட்டுரைகளை எழுதி நம் சமூகக்  கடமையை ஆற்றுவோம். வாய்ப்புகள் அமையும் போது குழுவாக களப் பணிகளையும் மேற்கொள்வோம்.

இணைய நண்பர்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும்  எதிர்பார்க்கிறேன். வளமான தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்.

தொடர்புக்கு

eMail : dreamtamilnadu@gmail.com

அன்புடன்
சஞ்சய்காந்தி.